×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா துவக்கம்: 11ம் தேதி தெப்ப உற்சவம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா இன்று துவங்கியது. விழாவின் முதல் நாளான இன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியான பல்லக்கில் புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்துக்கு 8 மணிக்கு வந்தடைந்தார். அதன்பின்னர் அங்கிருந்தவாறு நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடாகி வாகன மண்டபம் வந்தடைகிறார். இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

2ம் நாளான நாளை (5ம் தேதி) மாலை அனுமந்த வாகனம், 6ம் தேதி கற்பகவிருட்ச வாகனம், 7ம் தேதி வெள்ளி கருட வாகனம், 8ம் தேதி இரட்டை பிரபை வாகனம், 9ம் தேதி யானை வாகனத்தில் உள் திருவீதிகளில் வலம் வருகிறார். விழாவின் 7ம் நாளான 10ம் தேதி மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேர்கிறார். முக்கிய விழாவான தெப்ப உற்சவம் 11ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 4.30 மணிக்கு வருகிறார்.

இரவு 7.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார். 12ம் தேதி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 8 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேர்கிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றைபிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்ப திருவிழா நிறைவடைகிறது.

Tags : Maasi Deeppa Festival ,Srirangam Ranganadar Temple , Masi Theppa Festival at Srirangam Ranganathar Temple: Boat Festival on the 11th
× RELATED கோவிந்தா… கோவிந்தா… கோஷம் விண்ணதிர...